தமிழர் வாழ்வியலில் இழைந்தோடும் சைவம்

தமிழர் வாழ்வியலில் இழைந்தோடும் சைவம்

மேன்மை கொள் சைவநீதி என்பது சித்தாந்த சைவமேயாகும் சிவபரம்பொருளை ஏக இறைவனாக உணர்ந்து வழிபடுவோர் எந்நெறி நின்றாலும் சமயக்குரவர்களும் சந்தானக்குரவர்களும் காட்டிய "சித்தாந்த சைவநெறியே" முக்திநெறியும் தமிழர் வாழ்வியலில் இன்றும் இழைந்தோடும் நெறியுமாகும்

தமிழர், உலக நாகரீகங்களுக்கு எல்லாம் மூத்த பழங்குடியினர் இவர்களது வாழ்வியலில் இறைவழிபாடு என்பதும் நெறிப்படுத்தப் பட்டதாக செம்மையுடையதாகவே இருந்திருக்கும்  நடுகல் வழிபாடும் குலதெய்வ வழிபாடும் தமிழர்களின் ஒரு வழிபாட்டு பிரிவே அனறி இதுவே முதன்மையானது என்று எண்ணுதல் பொருந்தாக் கூற்று

உலகத்தோற்றம் உயிர்தோற்றம் வினைப்பயன் இவைபற்றிய தெளிவுடனே தமிழர்கள் வழிபாடுகள் செய்துள்ளனர் அவற்றை விளக்குவது சித்தாந்த சைவமாகும்

ஆகமங்கள் என்று தோன்றியவை என்று யாராலும் சொல்லமுடியாது அது சிவபரம்பொருளால் அருளப்பட்டது அதன் செய்திகளை ஆரியத்தில் உணர்ந்தோர் ஆரியத்திலும் தமிழில் உணர்ந்தோர் தமிழிலும் எழுதி நூலாக்கியிருப்பர், இதில் தமிழ் நூல்களில் திருமந்திரம் தவிர எனையவை தற்போது இல்லை

வடமொழி நூல்கள் பரவலாக கிடைக்கின்றன அவ்வளவே!! இதன்படி  தமிழர்களின் ஆதிகடவுளான சிவபரம்பொருள் அருளிய ஆகம சித்தாந்த வாழ்வியலயே தமிழர்கள் கடைபிடித்துள்ளனர் இன்றும் கடைபிடிக்கிறோம் அவ்வகையில் சில வாழ்வியல் நடைமுறைகளில் காணப்படும் மறைமுக சித்தாந்தங்களை சிந்திப்போம்

பூதவுடல்
 
    பெரிய மனிதர்கள் யாராவது இறந்து விட்டால் அன்னாரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது என்று குறிப்பிடுவோம்!! அது என்ன பூத உடல் என்று யாராவது சிந்தித்தோமா??

 உண்மை என்னவெனில் ஆரம்பத்தில் பிறவிக்கு வருவதற்கு முன் ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் காரண உடல், கஞ்சுக உடல், குணவுடல், சூட்சும உடல் என்ற கண்ணுக்கு புலப்படாத நான்கு வகை உடல்களை தந்து இறுதியாக நிலம் நீர் தீ வளி வெளி என்னும் ஐம்பூதக் கலவைகளால் ஆன இந்த பருவுடலாகிய பூதஉடலைத் தருகிறான்

எந்த உயிரும் அன்னை வயிற்றில் உதித்த பின்னர் அது எப்படி வினையை கழிக்கப் போகிறதோ அதற்கேற்ப இந்த பூதவுடல் தற்காலிகமாக அமையும் ஆனால் மேலே சொல்லப்பட்ட நான்கு உடலும் நிலையானவை கண்ணுக்கு புலப்படாதவை

ஆக ஒரு உயிர் நிகழ்பிறவியில் இறப்பு நிலையை எய்தினால் அந்த பூதவுடலை விட்டு மீதமுள்ள நான்கு உடல்களுடன் வெளியேறி அடுத்த பிறவியை நோக்கி நகரும் அதனால் எஞ்சியுள்ள பூதவுடலை நல்லடக்கமோ தகனமோ செய்கிறோம்

பூதவுடல் என்று அன்றாடம் பயன்படுத்தும் இந்த சொல் சைவ சித்தாந்தம் வழங்கும் கலைச்சொல் இதைத்தான் நாம் தினம் தினம் சொல்லி வருகிறோம் என்றால் வாழ்வியலுக்கும் சித்தாந்ததிற்கும் உள்ள தொடர்பு எண்ணிப்பார்க்கத் தக்கதன்றோ!?


செவுனேனு இரு


ஆம் "செவுனேனு இரு" என்பது ஒருவரை ஆற்றுப்படுத்தவும் அமைதியடையச் செய்யவும் கட்டுப்படுத்தவும் தமிழர்கள் அன்றாடம் கையாளும் சொல்லாடல்

இதன் சரியான பாதம் சிவனே என்று இரு என்பதாம்
சிவன் என்னும் ஓசைபோல் செம்மை தருவது வேறு ஒன்று உண்டா??! என்று வினவுவார் அப்பரடிகள் 🙏🏻

அவ்வகையில் துன்பம் துடைத்து இன்பம் தரவல்லது சிவநாமம் , இதனை நன்கு உணர்ந்திருந்ததால்தான் தமிழர் வாழ்வியலில் சிவனே என்று இரு என்ற சொல்லாடல் வழங்கி வருகிறது

ஒருவர் அமைதியில்லாமல் இருக்கிறார், சண்டை போடுகிறார், கோபப்படுகிறார் எனில் அவரிடம் ஏதுமறியா மக்களும் மாற்று நெறியினரும் கூட "செவுனேனு இரு" என்கிறார்கள் அதாவது "சிவநாமம் சொல் அமைதி பெறு" என்கிறார்கள் எனில் சிவன் எனும் ஓசைதான் தமிழரிடம் எத்தனை இழைந்துள்ளது என்பது சிந்திக்கத் தக்கதன்றோ??!!


துந்நூறு போடுதல்😆


ஆம் திருநீறு என்பதே தமிழகத்தில் துந்நூறு என்று வழங்கி வருகிறது தமிழக மக்களுக்கும் திருநீற்றுக்கும் உள்ள தொடர்பு மிகவும் நெருக்கமானது உடல் நலிவு என்று வந்தால் மருந்தோடு மக்கள் தேடுவது திருநீறைத்தான் என்றால் மறுப்பேதும் சொல்லவியலாது

பெரியோர்களிடம் சொல்லி வேண்டி துந்நூறு பூசுங்கள் என்பார்கள், காத்து கருப்பு அடிச்சிருக்கும் "துந்நூறு போடு" என்பார்கள் 

இவ்வழக்கம் சைவ சமய ஆச்சாரியரான ஞானசம்பந்தப் பெருமான் மதுரையில் ஏற்படுத்திய வழக்கமே ஆகும் 

பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு என்று எம்பெருமான் பாடிய சொல் இன்றும் பலித்து வருகிறது

திருநீறு என்றால் சிவம்தான் என்றாலும் சித்தாந்த சைவ வழிபாடு இல்லாத குலதெய்வ, ஊர்தெய்வ வழிபாடுகளின் போதும் பொதுவான வழிபாடுகளின் போதும் தமிழ் மக்கள் திருநீறு இல்லாமல் வழிபாடு செய்வதில்லை

யாதொரு தெய்வம் வேண்டில் அத்தெய்வம் ஆகியங்கே மாதொரு பாகனார் தாமே வருவார் என்ற அருணநந்தி சிவாசாரியார் வாக்கு இங்கு மெய்படுகின்றதன்றோ!?

தமிழகத்தில் ஏரிக்கரை ஊர்புறம் போன்ற இடங்களில் வசிக்கும் காவல் தெய்வங்கள் வழிபாட்டிலும் திருநீறே பிரசாதமாக உள்ளது, அனைத்து தெய்வங்களும் சிவபரம்பொருளை வணங்கி தாமும் திருநீறு பூசி அதையே நமக்கும் வழிபாட்டு நிறைவில் தருகின்றனர்

தமிழர்களின் தெய்வங்களில் திருநீறு பூசாத தெய்வங்களே இல்லை என்னும் அளவுக்கு காணவினியதான நீறு கவினைத் தந்து கொண்டு இருக்கிறது

அடியார் பெருமக்கள் திருநீற்றை நெற்றியில் முழுமையாகவும் உடலில் பன்னிரு இடங்களிலும் பூசி மகிழ்வர் இதனைக்காணும் பொதுமக்கள் சாமியார், பண்டாரம் என்றெல்லாம் கூட பேசி ஏதோ வழக்கத்தில் இல்லாததை இவர்கள் செய்வதாக எண்ணி சிரிப்பார்கள்

 ஆனால் அவர்கள் வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தால் இறந்தவருக்கும் திருநீறு பூசப்படும் ஈமக்கடன்கள் செய்வோருக்கும் திருநீறு பன்னிரண்டு இடங்களிலும் அணிவிக்கப் படும்

இறைவழிபாட்டில் கூட நியமம் தப்பலாம் என்று எண்ணுவார்கள் போல இறந்தோர் வழிபாட்டின் போது மெய்யெலாம் வெந்நீறு சன்னிப்பர் நம் தமிழ் மக்கள் எனில் திருநீறுக்கும் தமிழருக்கும் உள்ள தொடர்பு இன்றியமையாதது அன்றோ..


பிறவி

தமிழ் மக்கள் யாரோடாவது சண்டை போட்டால் எத்தினி ஜென்மம் எடுத்தாலும் உன் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று வெகுளுவார்கள் அதே சமயம் காதல் வயப்பட்டால் எத்தனை ஜென்மம் எடுத்தாலும நீயே எனக்கு புருசனா/மனைவியா வரனும் என்று உருகுவார்கள்

இதிலிருந்து பலபிறவி கோட்பாடு என்பது தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போன உண்மை என்பது எளிதில் புலப்படுகின்றதன்றோ

சைவசித்தாந்தம் பேசும் அடிப்படை விஷயங்களில் ஒன்று இந்த பலபிறவிக் கோட்பாடு இதனை ஏனைய இந்திய சமயங்களும் பேசுகிறதுதான் என்றாலும் சித்தாந்த சைவத்தின் அளவிற்கு அவை விரிவாக பேசவில்லை என்பதே உண்மை

நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப புதுப்பிறவிகள் அமையும் என்பதை அடிப்படை சமய அறிவு இல்லாத தமிழ் மக்கள் கூட உணர்ந்தே செயல் படுவர்

எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ இங்க வந்து பொறந்து அல்லல் படுறேன் என்று நம்மில் பலர் அலுத்து கொள்வது சைவ சித்தாந்தமன்றோ??


சிறு தெய்வக் கதைகள்

தமிழ் மக்கள் "சுடலை மாடன், இசக்கியம்மை, பேய்ச்சி" போன்ற காவல் தெய்வங்களை வணங்கி வருவது தொன்று தொட்ட மரபு இந்த தெய்வங்களின் கதைகள் ஏட்டில் எழுதப்படாத படித்தவர்களுக்கு தெரியாத வைதீகம் கலக்காத கதைகள், மக்கள் செவிவழியே முன்னவர்களிடம் கேட்டு பாடிப்பரவும்

இத்தகைய கதைகளிலும் சிவபரம்பொருளின் முழுமுதற் தன்மை தவறாமல் பேசப்படுகின்றது

தென் தமிழகத்தின் முக்கிய வழிபடு தெய்வம் சுடலை மாடன் இவரது கதை கயிலாயத்தில் துவங்குகிறது சிவபரம்பொருளுக்கும் பார்வதிக்கும் பிறக்கும் மகனாகவே சுடலைமாடன் வணங்கப் படுகிறார்

சுடலை மாடன் கதையில் ஒரு வரி மிகவும் குறிக்கத்தக்கது "மகன் வேண்டி இறைவனிடம் முறையிடும் உமையவளிடம் இறைவன் "கயிலாயத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் 36 தூண்கள் உள்ளதாகவும் அதில் 32 ஆவது தூணில் தூண்டாத சுடர் விளக்கு எரிவதாகவும் அங்கு இருந்து வழிபாடு செய் என்று கூறுவதாகவும் அந்த வரிகள் குறிக்கின்றன

சைவ சித்தாந்தம் 36 தத்துவங்களாக இறைவன் இருக்கிறான் என்றும் இதனைக் கீழிருந்து எண்ணினால் 32ஆம் தத்துவமாக ஈஸ்வர தத்துவம் இருப்பதும் இங்கிருந்துதான் இறைவனின் மாகேஸ்வர வடிவங்கள வெளிப்படுகின்றன என்பதும் எண்ணிப் பாத்தோமானால்  சித்தாந்தம் எத்தனை தூரம் தமிழர் வாழ்வியலில் கலந்தோடுகிறது என்பது புரியும்

இசக்கி பேய்ச்சி நல்லதங்காள் போன்ற தெய்வங்களின் கதைகளில் எல்லாம் இறுதியாக சிவபரம்பொருள் உமையுடன் தோன்றி அவர்களின் தியாகத்தை தெய்வ வடிவாக்கி அருளுவதாவே கதை அமைந்துள்ளது, எனில் சிவ பரத்துவம் நாட்டுப்புற மக்களின் எழுதப்படாத கதைப்பாடல்களில் எப்படி தங்கியது என்பது எண்ணத்தக்கது அன்றோ??!!


ஆண்டவன் ஒருத்தன் இருக்கான்

இந்த வாசகத்தை ஒருமுறையாவது சொல்லாத தமிழர் இருக்க முடியாது அவர் வைதீக வழிபாட்டாளராக இருந்தாலும் மேற்சொன்ன சிறுதெய்வ வழிபாட்டாளர்களாக இருந்தாலும் அனைத்து தெய்ங்களும் தனித்தனியே இருக்கின்றன என்று நம்புகிறவரானாலும்

துரோகிக்கப் பட்ட வஞ்சிக்கபட்ட ஒருநொடியில் ஆண்டவன் ஒருத்தன் பாக்குறான் என்று தனனையுமறியாமல் சொல்வார்கள்

இதைத்தான் ஒருவன் என்னும் ஒருவன் காண்!! என்று பாடுகின்றன சைவத்திருமுறைகள் மக்களின் வாழ்வியலோடு பொருந்தாத எதையும் மக்கள் கைவிட்டுவிடுவர்

பொய்யானவற்றை அவர்களிடம் பரப்பி நிலைபெறச் செய்யமுடியாது காலங்கலமாக அவர்கள் உயிரறிவில் ஊறிப்போன செய்திகளே இப்படி நொடிப்பொழுதில் வெளிப்படும்

அப்படியான ஒன்றுதான் ஆண்டவன் ஒருத்தன் என்ற சைவ சித்தாந்த உண்மையாகும்
இன்னும் இதுபோல எத்தனையோ சைவ சித்தாந்த கருத்துக்கள் வாழ்வியலோடு இணைந்திருக்கும்

உங்கள் பகுதிகளில் உள்ள வட்டார வழக்கங்களை எடுத்து சிந்தியுங்கள் அதனுடன் நிச்சயம் ஒரு சித்தாந்த உண்மையோ ஒரு சிவாலயமோ ஒரு சிவன்கதையோ தொடர்பில் இருக்கும் அடியேன் சிந்தனைக்கு புலப்பட்டவைகளை இங்கு எழதியிருக்கிறேன்

இதில் கூறப்பட்டுள்ள சித்தாந்த விளக்கங்கள் புரியவில்லை என்றால் அடியேனது எண் கீழுள்ளது தொடர்பு கொள்ளலாம்!!


திருச்சிற்றம்பலம்🙏🏻🙂

Comments