கூடு விட்டு கூடு பாய்தல்!

கூடு விட்டு கூடு பாய்தல்!. இன்றும் சாத்தியமே ........
{ 5000 வருடங்களுக்கு முன்பேயே சித்தர்களின் யோக அறிவியல் , யோக சக்திகள் யோக சாதனைகள் ஆதாரங்களுடன்.. வாசித்து பாருங்கள் முழுமையாக ..}
உடலும் உயிரும்!
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் அந்த உடலுக்கு யாதொரு மதிப்பும் கிடையாது. ஒன்று உடலைச் சுட்டெரித்து விடுகிறோம் அல்லது புதைகுழிக்குப் போகிறது. ஆக உயிர் தங்கி இருக்கும் வரையில்தான் இந்த
உடலுக்கு அவசியமும், தேவையும், மரியாதையும் இருக்கிறது. இப்படிப் பட்ட இந்த உடலும், உயிரும் எப்போது எப்படித் தோன்றுகின்றன? எது முதலில் உருவாகிறது?, உடலா?, உயிரா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர்தனது "அகத்தியர் ஆயுள் வேதம்” என்ற தனது நூலில் பதில் வைத்திருக்கிறார்.

சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு
கேளாய்
இன்னமுஞ் சுக்கிலத்தில்
பிராணவாய்வதுவுஞ் சென்று
தின்னமாய் பிராணவாயுவு சென்றது
கோபமுற்றி
யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய்
வளர்க்கம்
சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங்
கலக்குமென்று
பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும்
குமிழிபோல
ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு
மாய்ந்த
நாளிருபத்தைந்தி லருங்முளை
போற்றோன்றும்
                                     - அகத்தியர்.
ஆணின் சுக்கிலத்தில் பிராணவாயு சென்றடைந்து கிளர்ச்சியுற்று உயிரணுக்கள் வளர்ச்சி அடையும். இந்த சமயத்தில் ஏற்படும் உறவினால், பெண்ணின் சுரோணியத்துடன் ஆணின் சுக்கிலம் கலந்து வாத, பித்த, கபம் என்று சொல்லப்படும் மூன்று விகற்பங்களும் அதனுடன் சேர்ந்து சிறு குமிழி போலாகி கருப்பையின் உட்சென்று தங்கி வளரத் துவங்கி, இருபத்தி ஐந்து நாளில் முளை போல தோன்றும் என்கிறார். இது உயிரற்ற ஒரு நிலை...
முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது
கட்டியாகும்
பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள்
முதுகுமன்றி
யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா
யரையுங்கால்கள்
ளுந்திக்கு யுயிரும்வந்தே
யிணைந்திடுமென்றே.
                                           -   அகத்தியர்.
முதல் மாதத்தின் முடிவில் உருவான இந்த முளை பின்னர் வளர்ந்து ஒரு கட்டிபோல உருவாகுமாம். இரண்டாவது மாதத்தில் பிடறி, தோள், முதுகு ஆகிய பாகங்கள் உருவாகுமாம். மூன்றாவது மாதத்தில் உடல், விலா, இடுப்பு போன்றவைகள் உருவாகும்.அந்த கட்டதில் தான் கருவிற்கு உயிரும் வந்து இணையும் என்கிறார்.
ஆக,கருவானது மூன்றுமாத வளர்ச்சியின் பின்னரே உடலில் உயிர் வந்து சேருகிறது. அதன் பிறகே மற்ற அவயங்கள் வளரத்துவங்குகிறது. இந்த தகவல்கள் எல்லாம் அறிவியல் வளராத பலநூறு வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்களால் தீர ஆராய்ந்து சொல்லப் பட்டிருக்கின்றன என்பதில்தான் இந்த தகவலின் மகத்துவமே அடங்கி இருக்கிறது.
உடற்கூறியியலில் சித்தர் பெருமக்களின் ஆழ்ந்த அறிவு இன்றைய நவீன அறிவியலின் தெளிவுகளுக்கு கொஞ்சம் குறைந்ததில்லை என்பது நாம் பெருமிதத்துடன் நினைவு கூற வேண்டிய ஒன்று. ஆய கலைகள் அறுபத்தி நான்கில் ஐம்பத்திஇரண்டாவது கலையாகவும், சித்தர் பெருமக்களின் அட்டமா சித்துக்களில் ஆறாவது சித்தாகவும் கூறப் பட்டிருப்பது "பரகாய பிரவேசம்" என்னும் கலை. இதனை எளிய தமிழில் கூடு விட்டு கூடு பாய்வது என்று நம்பில் பலரும் அறிந்திருப்போம். 
உயிரானது உடலோடு எப்போது சேர்கிறது என்பதைப் பார்த்தோம். அப்படி சேர்ந்த உயிரானது நமது உடல் நலிவடைந்து செயலற்றுப் போகும் நிலையில் பிரிந்து விடுகிறது. இப்படி உயிர் உடலோடு சேர்வதும், சேர்ந்த உயிர் பிரிவதும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு செயல்.அப்படி இருக்கையில் நினைத்த மாத்திரத்தில் ஒருவர் தன் உடலை விட்டு நீங்கி பின்னர் அந்த உடலில் இணைவதோ அல்லது வேறொரு உடலில் இனைவதோ கற்பனைக்கும் எட்டாத ஒன்று. நிதர்சனத்தில் இது சாத்தியமே இல்லை என்கிறது நவீன அறிவியல். 
சாத்தியமே இல்லாத ஒன்றை நம் முன்னோர்கள் சாதித்திருக்கின்றனர். ஒருவரில்லை, இருவரில்லை பல்வேறு சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே இந்த கலையினைப் பற்றிய குறிப்புகளும்,  தகவல்களும் விரவிக் கிடக்கின்றன.
அதுபற்றிய சில விவரங்களை மட்டும் தொகுப்பதே இந்த தொடரின் நோக்கம்.
சித்தர் பெருமக்கள் நமது உடலை ஸ்தூல உடல், சூக்கும உடல் என இரண்டாக
கூறியிருக்கின்றனர். தனித்துவமான பயிற்சிகளின் மூலம் இந்த இரண்டு உடல்களையும் ஒன்றிலிருந்து மற்றதைப்பிரித்து மீண்டும் இணைய வைத்திட முடியுமாம். இந்த பயிற்சி இரண்டு வகைப்படும் ஒன்று “கூடு விடா நிலை”மற்றது “கூடு விட்டு கூடு பாய்தல்” கூடுவிட்டு கூடு பாய்தல் கேள்விப் பட்டிருப்போம்.
அதென்ன “கூடுவிடா நிலை”? இந்த கூடு விடா நிலையை சித்தர் பெருமக்கள் இறந்தும், இறக்காமல் இருப்பது என்கின்றனர். அதாவது நமது உடலை நாமே
இறந்தது போன்ற சலனமற்ற நிலைக்கு கொண்டுவந்து நீர், உணவு எதுவும் இன்றி சில நாட்கள் முதல் பல வருடங்கள் வரை வைத்திருப்பதையே கூடு விடா நிலை என்கின்றனர். பிரத்தியேக பயிற்சிகளின் மூலம் மட்டுமே இந்த நிலையினை அடைந்திட முடியும். 
இவை பற்றிய தகவல்கள் மிகவும் ரகசியமாக காக்கப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் நான் தேடிய வரையில் இந்த நிலையினை எட்டும் பிரத்யேக பயிற்சிகள் பற்றிய தகவல்கள் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை.
குருவருள் அனுமதித்தால் எதிர்காலத்தில் கிடைக்கலாம். இந்த கூடு விடா நிலை இயற்கையாகவே சில உயிரினங்களுக்கு உண்டு. மீன்கள் (Mangrove
killifish), தவளைகள் (burrowing frog) போன்ற சில உயிரிணங்களை உதாரணமாய்
காட்டிடலாம்.. இவை சில/பல மாதங்கள் உணவு நீர் இன்றி கூடுவிடா  நிலையானஅசைவற்ற நிலையில் இருக்கும். பின்னர் உரிய காலம் வந்ததும் பழைய நிலைக்கு திரும்பி வாழ தொடங்கும். இந்த கூடுவிடா நிலையில் இந்த விலங்கினங்கள் இறந்தது போன்றே இருக்கும்.
உடலை விட்டு வெளியேறி மீண்டும் அதே உடல் அல்லது வேறு உடலோடு இணையும் பரகாய பிரவேசக் கலையானது,
”கூடு விடா நிலை”, “கூடு விட்டு கூடு பாய்தல்” என இரண்டு படி நிலைகளை கொண்டது என்பதை நேற்று பார்த்தோம். முதல் நிலையில் தேறியவர்களுக்கு மட்டுமே இரண்டாவது நிலை சாத்தியமாகும். கூடு விடா நிலையில் உடலின் இயக்கம் யாவும் மட்டுப் பட்டு மிகமெலிதான சுவாசம் மட்டுமே இருக்குமாம். இத்தகைய நிலைக்குஉடலை பக்குவப் படுத்திட மிகக் கடுமையான பயிற்சிகள் அவசியமாகிறது.
அவற்றை இரண்டு வகைகளாக கூறியிருக்கின்றனர். காய கற்பங்களை
உண்பதன் மூலம் “காய சித்தி” நிலையை எட்டுவது. மற்றது யோகப் பயிற்சிகளின் மூலம் உயர் நிலையான யோக சித்தி அடைவது. இவ்விரண்டு பயிற்சிகளின் மூலமே கூடு விடா நிலையினை அடைய முடியுமாம். தற்போதைய நவீன அறிவியலோ இதன் சாத்தியங்களை முற்றாக நிராகரிக்கிறது.
ஆக, உடலை தகுதிப் படுத்துவதே இந்த கலையின் முதற்படி நிலை. ஏனெனில் உடலை விட்டு வெளியேறி மீண்டும் இணையும் வரை அந்த உடலானது அழியாமல் இருப்பது அவசியமாகிறது. இதன் பொருட்டே தங்களின் உடலை காடுகளிலும், மரபொந்துகளிலும், குகைகளிலும் மறைத்து வைத்ததாக தகவல்கள் காணக் கிடைக்கின்றன.
இப்படி மறைத்து வைத்த உடல் ஒரு வேளை அழிந்து விட்டால் புதிதாக இணைந்த உடலுக்குத் தேவையான கற்பங்களை உண்டு அந்த உடம்பினை தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டுமாம். இந்தச் செய்தி கருவூரார் அருளிய கருவூரார் வாத காவியம் என்னும் நூலில் காணக் கிடைக்கிறது.
வழக்கத்தைச் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு வகையுள்ள சித்தநாதர்கள் மாறிமாறிப் பழக்கமுள்ள கூடுவிட்டுக் கூடுபாய்வார் பார்த்தவருங் காலமட்டு மிருந்து வாழ்வார்.
முழக்கமுடன் பின்புவந்து தன்சரீரம்
முழைந்து கொள்வார் தன்சரீரத்
தப்பிப்போனால்
இளக்கமுள கற்பமதை சாப்பிட்டேன்தான்
இனிமையுடன் செடமலதைப் பெலஞ்
செய்வாரே
பெலஞ் செய்வா ரதைவிட்டு மறுகூடேகிப்
பின்புமொரு கூடதனிற் பாய்ந்து வாழ்வார்
நலமுடனே அவர்கள் செய்யுந்
தொழிலையேதான்
நானெடுத்துச் சொல்ல வென்றால்
நாவோயில்லை.
பலமுடனே பரகாயஞ் செய்யும் பொழுது
பார்த்தாக்கால் வெகுசுருக்கு அதீதம் மெத்த
தலமுடனே தன்சரீர மொளித்து வைக்கத்
தான்செய்து வைத்துவைக்குங்
குகையைப்பாரே.
மேலும் யோக சித்தி மற்றும் காயசித்தி அடைந்த நிலையில் உள்ள உடலை அழிப்பதும் கடினம் என்கிற செய்தியும் நமக்கு கிடைக்கிறது.
திருமூலர் தன்னுடைய உடலில் இருந்து சமுத்திர ராஜன் உடலுக்கு
கூடு விட்டு கூடு பாய்ந்து குடும்பம் நடத்தி வருகையில், மனைவியிடம் கொண்ட மோகத்தினால் தன் பூர்வ கதையையும், தன் உடல் இருக்கும் இடத்தையும் கூறிவிடுகிறார். மனைவி அந்த உடல் தன் இல்லற வாழ்க்கைக்கு ஆபத்து என கருதி அதை அழிக்கும் வகையினைக் கேட்க மனைவி மீதிருந்த அன்பினால் அந்த வகையினையும் சொல்கிறார். மனைவி தன் ஆட்களை அனுப்பி குகையில் இருந்த உடலைக் கண்டறிந்து
திருமூலர் சொன்னபடி மருந்து பூட்டி எரித்த தகவல்கள் கருவூராரின் பின் வரும் பாடல்களின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.
மற்றோருற் றோரும் மகிழ்ந்திருக்க இந்த
மாப்பிள்ளை பெண்ணும் பஞ்சணையில்
சற்றே படுத்துச்சந் தோஷமுற்றுப் பின்பு
தானிருந் தார்வெகு காலமட்டும்.
தாகம தாக யிருபேரு மொன்றாகச்
சந்தோஷ மாக யிருக்கையிலே
மோகத்தி னாலேமுன் வந்த சரிதையை
முற்றிலு மங்கே மொழிந்து விட்டார்.
என்றைக் கிருந்தாலும் மோசம் வருமென்று
எண்ணியே மாது இவரிடத்தில்
நன்றான வார்த்தைகள் பலது பேசியே
நன்மையுள்ள சன மெங்கேயென
கேட்ட வுடனே குகையிலிருப்ப தாய்க்
கெம்பீர மாகவுஞ் சொல்லி விட்டுத்
தேட்ட முடனதை யாருஞ் சுடாரென்றும்
தீயிடுஞ் சேதியுஞ் சொல்லி விட்டார்.
இந்த வகையெலாங் கண்டுகொண்டு அந்த
ஏந்திழை யாளும் புலையர்களை
விந்தை யுடனங்கு தானனுப் பிச்சடம்
விபரங் கூறியே வாக்களித்தாள்
மலையீனிற் சென்று குகையிற் பார்க்கையில்
மாது சொன்ன சடந்தானிருக்கப்
புலையர் கூடிச் சடத்தை மருந்துகள்
பூட்டியே மாட்டினார் தீயதனை
வெந்துநீ றாகியே போனபின்பு அதில்
மிக்க அஸ்திகளைத் தானெடுத்துச்
சந்தோஷ மாகவே ராஜாத்தி தன்னிடம்
தான் காட்டிப் போயினா ரேபுலையர்.
இப்படியாக இது முடிந்த தென
யாருக்குந் தோணாம லேயிருக்கச்
செப்பமுள்ள திரு மூல ராஜனும்
சிறப்பாய் வேட்டைக்குந் தானெழுந்து
வேட்டைக ளாடி முடித்தபின்பு மலை
மீதிலிருக்குங் குகையினிற் போய்
தாட்டிக மான சடத்தையுங் காணாமல்
தவித்து மயங்கியங் கேயிருந்து
வச்சிரந் தேகமதுஞ் சுட்டுக் கிடப்பதை
மனதாரக் கண்ணாலே தான்பார்த்து
உச்சித மாகத் தெரிந்து கொண்டு பின்பு
ஊரினி லேவந்து சேர்ந் திருந்தார்.
இந்தப் படியிவர் தானிருக்க இவர்க்
கினிமை யாகிய சீஷனுந்தான்
விந்தையுட னெங்குத் தான்தேடி இங்கு
விருப்ப மாகவே தேடிவர
சீஷன் வருவதைக் கண்டு திருமூலர்
செய்திகள் யாவு மவரிடத்தில்
நேசமுடன் சொல்லச் சீஷனுங் கண்டு
நெடுஞ்சாண் கடையாக வேதானும்.
பாதத்தில் வீழ்ந்து குருவென் றறிருந்துபின்
பத்தி யொடுசில வார்த்தை சொல்லி
நீத முடனேதான் தேடின சங்கதி
நேர்த்தியாய்ச் சொல்லி முடித்துவிட்டு
அன்றங்கு ராத்திரி தானிருந்து பின்
அருமையுள்ள மனை யாள் தனக்கும்
சென்றங்கு ஓர்சேதி சொல்லா மலிவர்
சேர்ந்தங் கிருவருந் தானேகி
காடு மலைகள் கடந்து குகைதனைக்
கண்டு யிருவரு மங்கிருந்து
தேடியே கற்பங்கள் சாப்பிட்டுப் பின்பவர்
தேகசித்தி செய்து கொண்டிருந்தார்.
ஆக கூடு விடா நிலை என்பது ஒரு வகையில் உடலினை உறுதி செய்து, உடல்
இயக்கத்தை ஒரு ஒழுங்கில் கொண்டு அதன் இயக்கத்தை தேவைப் படும் போது நிறுத்தி வைக்கவும், செயல்படுத்தவுமான ஒரு கலை என்பது மட்டும் புரிகிறது. இந்த நிலையில் தேறினால் அழியாத உடலும் ஆரோக்கியமும்
பெற்றிருக்க முடியும் என்பது தெளிவாகிறது.
இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் நமக்கு உடற்கூறியல், மனித ஆயுட் காலம் பற்றிய பல புதிரான பக்கங்களை தெளிவு படுத்தும்  வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இது தொடர்பாக முயற்சிக்கலாமே!
சித்தர் பெருமக்கள் பலரும் கூடு விட்டு கூடு பாய்ந்த தகவல்கள் நமக்கு பாடலாக கிடைத்திருக்கின்றன.
தன்னுடைய உடலில் இருந்து உயிரைப் பிரித்து உயிரில்லாத மற்றொரு உடலுக்குள் நுழைந்து அதனை இயக்கத்திற்கு கொண்டு வருதலையே கூடு
விட்டு கூடு பாய்தலாக அறிகிறோம். அந்த உடலில் சேர்ந்த பின்னர் தங்களின் பூர்வ கதைகள் அவர்களுக்கு நினைவில் இருந்ததும், தாங்கள் புகுந்த உடலுக்குறியவனின் கடமைகளையும் நிறைவேற்றியதையும்
அறிய முடிகிறது.
கோரக்கர் தன் குகையின் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த இடையன் நாகம் தீண்டி இறந்து போக, அவன் உடலைப் பார்த்து கதறிய மனைவியின் துயர் நீக்க தன் உடலை மறைத்து வைத்து இடையனின் உடலில் புகுந்து இடைச்சியின் துயர் நீக்கியதாக பின் வரும் பாடல் மூலம் அறிய முடிகிறது.
கண்டதோ ரிடையன் றன்னைக் கதித்ததோர்
நாகந்தீண்டி
கொண்டதோ ரிடையன் சாகக் குறித்திடுந்
தோழர்கண்டு
விண்டவன் மனையாளுக்கு வேகமாய்ச்
சென்று சொல்லப்
பண்டுள்ள விதியோ நான்தான் பாவியோ
யென்றுவந்தாள்
வந்தவள் துயர்கண்டு மறுகூடு பாய் வதற்கு
அந்தமா கிரிக்குச் சென்று ஆக்கையைப்
பதனஞ் செய்து
நந்தனா மிடையன் கூட்டில் நயமுடன்
பாய்ந்து பின்பு
முந்தியுள் ளிடையன் போல மங்கைமுன்
வந்தார்.
ஒரு நாள் காட்டில் வேட்டைக்கு வந்த அரசனொருவன் கோரக்கரின் உடலைப் பார்த்து யாரோ இறந்தவர் உடலென எண்ணி தீயிட்டு எரித்து விட்டானாம். பிறகு கோரக்கர் தன் உடலை தேடி வந்த போது அது அழிந்தது கண்டு தனது சீடனான நாகார்ச்சுனனையும், சாணயாகியாரையும் தேடி, அவர்களை
அழைத்துக் கொண்டு மூவருமாக ஒவ்வொரு வனமாக சித்தர்களை சந்திக்க சென்றார்களாம்.
சென்று ஒவ்வொரு வருடமாக ஒவ்வொரு சித்தருடனும் இருந்து குறைவில்லாது கற்பங்களை உண்டு இடையனின் உடலிலேயே
வாழ்ந்திருந்தார் என அறிய முடிகிறது.
காசியில் சேனியர் குலத்தில் பிறந்த சட்டைநாதரும் ஞானம் பெற்று, கற்பங்கள் உண்டு பல்வேறு இடங்களைக் கடந்து சதுரகிரியை அடைந்தாராம். அங்கே இறந்து கிடந்த ஒரு பிராமணரின் உடலில் புகுந்து கற்பங்களை உண்டு அந்த உடலை மேம்படுத்தில் அப்படியே வாழ்ந்திருந்தார்
என்பதை பின்வரும் பாடல் மூலம் அறிய முடிகிறது.
பெற்றுடன் வாழ்ந்தா ரந்தப் பேர்பெற்ற
சட்டைநாதர்
உற்றசேணியர் குலத்தி லுதித்துநெய் தொழிற்
படித்து
நற்றமிழ் தேர்ந்து இந்த நானில மெய்க்க
ஞானங்
கற்றுமே கற்பங் கொண்டு காசினி தனைவிட்
டேகி
விட்டுடன் மலையி லேறி வேதைக ளநேகஞ்
செய்து
சட்டம தாக வேதான் சதுரமா கிரியில் வந்து
மட்டுடன் பிராமண தேக மதனிலே நுழைந்
துகந்து
திட்டமாய் கற்பங் கொண்டு சிறப்புட
னிருந்தார் பாரே.
இடையர் குலத்தில் பிறந்தவரான கொங்கணவர் கற்பங்கள் உண்டு இயல்பாய் வாழ்ந்திருந்த போது மலை மீதேறி அங்கிருந்த பளிங்கர்களுடன் உறவாடியிருந்தாராம். ஒரு சமயம் பளிங்கர் இனத் தலைவன் உயிரிழக்க
அவர்களின் துயர் நீக்க தன்னுடல் விட்டு தலைவனின் உடலில் புகுந்து உயிர்ப்பிக்கச் செய்தாராம். மகிழ்ந்த பளிங்கர்கள் அவருடலை எரித்து விட்டனராம். பின்னர் பளிங்கர்களுடன் செடிகொடிகளை தேடி அறிந்து கற்பம்
உண்டாக்கி உண்டு அந்த உடலிலேயே வாழ்ந்திருந்தாராம். இந்த தகவல்கள் பின் வரும் பாடல்கள் மூலம் நமக்குத் தெரிகிறது.
உள்ள கொங் கணரு மாதி யிடையனா யுலகந்
தன்னில்
மெள்ளவே கற்ப முண்டு வியப்பதாய்
மலையில் வந்து
வள்ளலா யிருந்து பேரை வாங்கியே பளிங்க
ரோடு
கள்ளமில் லாமல் வாழ்ந்து காட்டினி லிருந்து
வந்தார்.
வந்திடும் போதங் கேதான் மலைப்பளிங்
கணுமே செத்து
விந்தையாய்ப் போகப் பார்த்து மிகவேதா
னிரக்கங் கொண்டு
சந்தோஷ மாகத் தம்தன் சரீரத்தை வைத்து
விட்டு
இந்தநல் சரீரந் தன்னி லியல்புடன் பாய்ந்து
விட்டார்.
விட்டதைப் பளிங்கர் கண்டு மிகவேகொங்
கணர்தேகத்தை
கட்டையில் வேகவைத்துக் களிப்புட னிருந்து
விட்டார்
திட்டமாய்ப் பளிங்கரோடு சேர்ந்திலை
செடிகள் கண்டு
சட்டமாய்த் தெரிந்து கற்பந் தானுண்டு
மலையில் வாழ்ந்தார்
மலையிலே வாசஞ் செய்து வந்தன ரங்கங்
கேதான்
தொலைதனி லிருக்கும் பூடு துறவுடன்
தெரிந்து கொண்டு
வலையினி லகப்படாமல் மலையெலாஞ்
சுத்திச் சுத்தி
இலைசெடி மரங்கள் தானும் இயல்புட
னறிந்திருந்தார்.
கூடுவிட்டு கூடுபாயும் சித்துகளை பெற்றவருக்கு மரணம் இல்லை!!

ஆன்ம பயணம்( astral travel ) செய்வது  எளிது . அது யார் வேண்டுமானாலும்செய்யலாம்.  அதற்கு கண்ணாடி பயிற்சி செய்தால் ஆன்மாவை உடலை விட்டு பிரிக்க முடியும்.
முன்னோர்கள் நம் உடலை மூன்று வகையாக பிரித்து விளக்கியுள்ளனர். 
1) பரு உடல் 
2)நுண்ணுடல்( astral body ) 
3) காந்த உடல்
( causal body ).
1)பரு உடல் என்பது செல்களால் ( cell ) ஆனது. பல விதமான தனிமங்களால் ஆனது . பல செல்கள் இணைந்த கூட்டு அமைப்பு உடல்.
2) நுண்ணுடல் என்பது பஞ்ச பூதங்களில் ஒரு பிரிவாக உள்ளது விண் என்னும்
நுண்அனுவாகும். அதுவே உயிர் என்றும் உயிராற்றல் என்றும் , உயிர் சக்தி என்றும் கூறப்படுகிறது. உயிர் என்பது மிக நுன்னிய பருமனை கொண்டது. சூச்சும நிலையில் நிறைந்து ஓடுவதால் அதனை சூச்சும சரீரம் என்று அழைக்கிறோம். உயிரிலிருந்து வெளிபடும் உயிர்துகள் தான் சூக்கும உடல்.
3). காந்த உடல் என்பது நுண்ணிய இறைதுகளால் ஆனது. ஒவ்வொரு
இறைதுகளும் தன்னை தானே மிக வேகமாக சுற்றி கொண்டு இருக்கிறது. எப்போதும் விண்ணிலிருந்து இறைதுகள் வெளியேறி கொண்டே இருக்கிறது . அவ்வாறு வெளியேறும் காந்த அலை சீவ காந்தம் ஆகும் .
உயிரிலிருந்து. வெளியாகும் காந்த உயிர்ஆற்றலே இத்தனை வேலைகளையும் நடத்துகிறது.
கூடு விட்டு கூடு பாய்வது எப்படி ?.
சுவாதிஷ்டானம் மற்றும் மணிபூரகத்தில் மனதை வைத்து தவம் செய்யும்போது கூடுவிட்டு கூடு பாயலாம். இதற்கான சூச்சும முறையை மறைமுகமாக சித்தர்கள் பாடலில் சொல்லி இருக்கிறார்கள். இதன்
இரகசியத்தை அறிவது கடினம். உயிரை உடலை விட்டு பிரிக்கும் கலை மறைந்தே போய்விட்டது.
யோகத்தில் உயர்ந்த வெற்றி கூடு விட்டு கூடு பாயும் செயல் தான். கூடுவிட்டு
கூடுபாயும் நுட்பம் தெரிந்து கொண்டால் உலகமே நம் கைக்குள் அடங்கிவிடும்.
பிரகாமியம் - கூடுவிட்டுக் கூடுபாய்தல் நினைத்தவர் முன்னால்
உடனே தோன்றுதல். இது அட்டமா சித்திகள் ஒன்றாக கருதபடுகிறது.
விபத்தாலோ அல்லது கொலை செய்தாலும் மீண்டும் இறந்த உடலில் புகுந்து உயிர் பெற்று வந்துவிடலாம். இறப்பு உடலுக்கு நிகழ்ந்தாலும் உயிருக்கு நிகழ்வதில்லை. உடலில் உயிர் இருக்கும் போது தான் உயிரில்
வலி உண்டாகிறது.
எல்லாம் நன்மைக்கே!!!
இது போல இன்னும் பல சித்தர் பெருமக்கள் கூடுவிட்டு கூடு பாய்ந்த தகவல்கள் காணக் கிடைக்கின்றன. இந்த தகவல்களின் பின்னால்
நிரம்பியிருப்பது சித்தர் பெருமக்களின் மனித நேயம் என்றால் மிகையில்லை. இந்த தகவல்களை எல்லாம் தேடித் திரட்டுவதே
இப்போதைக்கு நாம் செய்யக் கூடியதாக இருக்கும். தகவல்கள் எல்லாம் ஒரு ஒழுங்கில் வைத்த பின்னரே அதன் மீதான எந்த ஒரு ஆய்வும், தீர்மானமும் செய்திட முடியும்.அந்த வகையில் என்னளவில் இந்த தொடர் ஒரு ஆரம்பப் புள்ளியாக அமையும். எதிர் காலத்தில் குருவருள் அனுமதித்தால் மேலதிக
தகவல் திரட்டி தெளிவுகளை பகிர்ந்து கொள்கிறேன்.
ஆச்சர்யமான தகவல்தானே!......
சிவ சிவ சிவ சிவ நமசிவாய...................

Comments

Post a Comment