கோவில்களில் நடைபெறும் தீபாராதனையின் வரிசையையும் அதன் தத்துவத்தையும் பார்ப்போம்.

 கோவில்களில் நடைபெறும் தீபாராதனையின் வரிசையையும் அதன் தத்துவத்தையும்  பார்ப்போம்.

இனி கோவில்களில் நடைபெறும் தீபாராதனையின் வரிசையையும் அதன் தத்துவத்தையும்  பார்ப்போம். இந்த வரிசை அலங்காரம் குறிப்பாக சைவ ஆலயத்தில் கடைபிடிக்கும் கிரியையை சொல்லி உள்ளோம்.
கோவில்களில் அலங்கரிக்கப்பட்ட மூர்த்தங்களுக்கு முன்பு  திரையிடப்பட்டிருக்கிறது.திரைக்கு உள்ளே இருந்து பூஜையை குருக்கள் ஆரம்பிக்கிறார். முதலில் மணியோசை கேட்கிறது. எல்லையில்லா வெற்றிடத்தில் முதலில் ஒலியே பிறக்கிறது. ஒலியில் இருந்து ஒளி பிறப்பது ஒரு தீபத்தின் மூலம் காட்டப்படுகிறது.
இப்போது திரை நீக்கப்பட்டு அடுக்கு ஆரத்தியைப் பார்க்கிறோம்.
ஒலியில் இருந்து இறைவன் அருளால் பல நிலைகளில் உள்ள ஜீவன் பிறப்பதை அடுக்கு ஆரத்தி உணர்த்துகிறது.   அண்டவெளியில் புலப்படாதிருந்த உலகம் திரையை விலக்கிக்கொண்டு நமக்குத் தெரிகிறது. இறைவன் உயிரில் கலந்து உருவமாகப் புலப்படுவதும் திரை விலகிய பிறகு இறை வடிவத்தைக் காண்பதும், அதன் முன்னே இருக்கும் அடுக்கு ஆரத்தியும் குறிப்பிடுகின்றன. அடுக்கு ஆரத்தியில் தீபங்கள் பல தட்டுகளில் இருந்தாலும், அவை உருவமற்ற ஒரே பரம்பொருளின் வடிவத்தைக் குறிப்பிடுகின்றன.

 பிறகு ஐந்து தட்டுகள் காட்டப்படுகின்றன. அவை சத்யோஜாதம் வாமதேவம், அகோரம் ,தத்புருஷம் ஈசானம்என ஐந்து முகங்கள்  இவை சிவபெருமானின் ஐந்து முகங்களையும், அதிலிருந்து பஞ்சபூதங்கள் படைக்கப்படுவதையும் உணர்த்துகின்றன. பிறகு ஐந்து பூதங்களும் சேர்ந்து பிரபஞ்ச வடிவமாக விளங்கும் கும்பாரத்தி காட்டப்படுகிறது. கும்பம் அண்டத்தையும், அதன் மீதுள்ள தீபம் அதை இயக்கும் இறைவனையும் குறிப்பிடுகிறது.
அதையடுத்து நாகதீபம், மயூரதீபம், குக்குட தீபம், ரிஷப தீபம், கஜதீபம், புருஷாமிருக தீபம், புருஷ தீபம், அஸ்திர தீபம் ஆகியவை காட்டப்படுகின்றன. இவை மூலம் முதலில் ஊர்வன, அடுத்து பறப்பன, அடுத்து மனிதனும் விலங்குமாகிய புருஷாமிருகம், அடுத்து மனிதன், இந்த வளர்ச்சிக்குப் பிறகு வாழ்வதற்கான ஆயுதம் ஆகியனவும் விஞ்ஞான முறையில் காட்டப்பட்டு வருகின்றன.இவை உருவத்தால் வேறுபட்டிருப்பினும் பஞ்சபூதங்களுக்கு உட்பட்டு இயங்குவன என்னும் பொருள்பட அவற்றின்மீது பிரபையும் அதில் ஐந்து தீபங்களும் அமைந்துள்ளன.

 இவ்வாறு ஒரே பரம்பொருளிலிருந்து தோன்றிய ஜீவன் பல நிலைகளைக் கடந்து அறிவால் இறைவனை அறிந்து கொள்கிறது. இந்த ஆன்மா ஒரே ஆரத்தியாகக் காட்டப்பட்டு அதன் பக்குவ நிலையை உணர்த்தும் பொருட்டு அதன்மீது விபூதி தெளிக்கப்படுகிறது.
அடுத்து ஏழு கிளைகளையுடைய கர்ப்பூர ஆரத்தி காட்டப்படுகிறது. விபூதிகள் கைவரப்பெற்று உயிர் பத்துவித குணங்களைக் கொள்கிறது. குணங்கள் கூடிக்கொண்டு வருவதை இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று என்று வரிசையாக தீபங்களாகக் காட்டப்படுகின்றன.
பக்குவம் அடைந்த ஜீவன் இறைவனின் சாரூப நிலையைப் பெறுவதால் இறை வடிவமாகப் போற்றப்படுகிறது. எனவே எட்டு திசைகளிலும் உள்ளவர்கள் போற்றுவதைக் குறிக்கும் வகையில் அஷ்டமங்கலம் காட்டப்படுகிறது. கிழக்குத் திசையான இந்திரன் திசையிலிருந்து குடையும், தென்கிழக்கான அக்னி திக்கில் இருந்து அடுக்கு தீபமும், தெற்கு திசையாகிய யம திக்கில் இருந்து சுவஸ்திகமும், தென்மேற்கு திசையாகிய நிருதி திக்கில் இருந்து சாமரமும், மேற்கு திசையான வருண திக்கில் இருந்து பூரண கும்பமும், வடமேற்கு திசையான வாயு திக்கில் இருந்து விசிறியும், வடக்கு திசையான குபேர திக்கில் இருந்து ஆலவட்டமும், வடகிழக்கு ஈசான்ய திக்கில் இருந்து கொடியும் கொண்டு வரப்பட்டதாகக் கருதி அவை காட்டப்படுகின்றன.

Comments