பைரவரை எப்படி வழிபட வேண்டும்!!!
பைரவரை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் சிறந்த நாளாகும். ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும், பைரவரை வழிபடுவதாகவும், அதனால் அன்று அவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம் என்பது ஐதீகம். பைரவருக்கு பிடித்தமானது சந்தனகாப்பு. இதில் வாசனை திரவியங்களான புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக்காப்பு செய்து வழிபடுவது சிறப்பாகும். சந்தனகாப்பு செய்வதால் ஒருகோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது.
பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தனமாலை அணிவித்து செவ்வரளி, மஞ்சள், செவந்தி மற்றும் வாசனை மலர்களை கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம். பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், தேன், செவ்வாழை, வெல்லப்பாயசம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது. பைரவரை காலையில் வழிபட சர்வநோய்களும் நீங்கும்.
பகலில் வழிபட விரும்பியது எல்லாம் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும். இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை கிட்டும்.
பைரவருக்கும் சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாக கட்டி நல்லெண்ணை அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.
அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாக பிளந்து அதனுள் எண்ணை அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.
Comments
Post a Comment