பீஷ்மாஷ்டமி (25.01.2018)

பீஷ்மாஷ்டமி (25.01.2018)

🍀பீஷ்மரை பற்றி அறியாதவர் இல்லை. மகாபாரத்தின் பெரிதும் சிறப்பு மிக்க வீரர். தன்னலமற்று பிறருக்காக வாழ்ந்தவர். கௌரவர்களையும் பாண்டவர்களையும் நல்வழிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டவர். கௌரவர்பக்கம் மேற்கொண்டு குருக்ஷேத்ர போரில் தன் உயிர் துறந்தவர்.🍀


🍀பீஷ்மர் சகல கலைகளிலும் வல்லவர். பஞ்ச பாண்டவர்களுக்கும் துரியோதனன் கூட்டத்தினருக்கும் பாட்டனார் ஆவார். விதிவசத்தால் பீஷ்மர், துரியோதனன் கூட்டத்துடன் இருக்க நேர்ந்தது. சகுனியுடன் சூதாடி பாண்டவர்கள் நாட்டை இழந்தது, பாஞ்சாலி மானபங்கம், அவளை கண்ணன் காத்தது, பின் பாண்டவர் வனவாசம், இறுதியாக நடந்த பாரதப் போர் போன்றவற்றை நாம் அறிவோம்.🍀

🍀பாரதப்போர் தட்சிணாயன கால இறுதி மாதமான மார்கழியில் நடைபெற்றது. துரியோதனன் படைக்கு பீஷ்மர் தலைமை தாங்கினார். பாண்டவர் சார்பில் அவரை எதிர்க்க வந்த அர்ச்சுனன் சிகண்டி எனப்படும் அலியை முன்நிறுத்திக் கொண்டான்.  சுத்த வீரனுடன் போரிட்டு வெற்றி கண்ட பீஷ்மர் சிகண்டியைப் பார்த்ததும் அம்பு தொடுக்காமல் நின்றார். இதுதான் சமயம் என்று கண்ணபிரான் ஜாடை காட்ட, பீஷ்மர் மீது பானங்களை எய்தான் அர்ச்சுனன். அர்ச்சுனனின் பாணங்கள் பீஷ்மரின் உடலைத் துளைத்தன. பீஷ்மர் போர்க்களத்தில் விழுந்தார். ஆனால் அவரது உயிர் பிரியவில்லை.🍀

🍀தட்சிணாயன காலத்தில் உயிர் பிரிந்தால் மோட்சம் கிட்டாது என்பதால், உத்தராயண காலம் துவங்கும் வரை காத்திருக்க விரும்பினார் பீஷ்மர். அதுவரை அம்புப் படுக்கையில் படுத்துத் தவம் செய்தார்.🍀

🍀பீஷ்மரைக் காண்பதற்கு பாண்டவர்கள் வந்தனர். தலைப்பக்கத்தில் துரியோதனன் நின்று கொண்டிருந்தான். பீஷ்மரின் காலடிப் பக்கம் பாண்டவர்கள் நின்றிருந்தனர். அப்போது தாகத்திற்குத் தண்ணீர் கேட்டார் பீஷ்மர். துரியோதனன் பழரசம் கொண்டுவர ஓடினான். பீஷ்மர் அவனைத் தடுத்து நிறுத்திவிட்டு, அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் ஓர் அம்பினை மந்திரம் ஜெபித்து பூமியில் எய்தான். அம்பு துளைத்த இடத்திலிருந்து கங்கை ஊற்றெடுத்து மேலே பீறிட்டு வந்து பீஷ்மரின் தாகத்தைத் தணித்தாள். மகனுக்கு கங்கை அளித்த கடைசி நீர் இதுவாகும்.🍀

🍀உத்தராயணம் பிறக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த பீஷ்மர் ஸ்ரீமன் நாராயணனை நினைத்துப் பிரார்த்தித்தார். அப்பொழுது பீஷ்மர் துதித்ததுதான் விஷ்ணு சகஸ்ரநாமம்.  பாரதப் போரினால் இந்த உலகிற்கு கீதையும் கிடைத்தது.🍀

🍀உத்தராயண காலம் ஆரம்பமானது. தை மாத ரத சப்தமிக்கு அடுத்த நாள், பீஷ்மர் தான் விரும்பியபடி உயிர் துறந்தார். அந்த நாள் அஷ்டமி திதி. அதுவே, “பீஷ்மாஷ்டமி" என்று போற்றப்படுகிறது.🍀

🍀பீஷ்மர் பிரம்மச்சாரி. அவர் முக்தி அடைந்த நாளில் தர்ப்பணம் கொடுக்க வாரிசுகள் இல்லாததால், அவர்மீது அன்பு கொண்டவர்கள், தகப்பனார் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்ற வேறுபாடில்லாமல் எல்லா சமூகத்தினரும் தர்ப்பணம் கொடுத்தார்கள். அதுவே இன்றும் வழக்கத்தில் உள்ளது. சாஸ்திரம் அறிந்தவர்கள் இதனைக் கடைப்பிடிக்கிறார்கள்.🍀

🍀பீஷ்மாஷ்டமி அன்று பிதாமகருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தர்ப்பணம் செய்யப்படுகிறது. எள்ளும், நீரும் கொடுத்து இன்று தர்ப்பணம் செய்தால் ஒருவரின் பாபச் சுமை நீங்கும் என்பது உறுதி.  கங்கை நீர் கொண்டு கங்கை மைந்தருக்கு தர்ப்பணம் செய்தால் இன்னும் புண்ணியம். குழந்தை இல்லாதவர்கள் இந்த நாளில் விரதமிருந்து தர்ப்பணம் செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும்.🍀

பிதாமகராம் பீஷ்மரை நினைத்து வணங்கி இந்த பீஷ்மாஷ்டமியில் நற்பலன் பெறுவோம்.

Comments