தைப் பொங்கல் திருநாள்

நன்றி செலுத்தும் நன்னாள்தைப் பொங்கல் திருநாள்... 

உலகத்துக்கே ஒளியையும் உயிர்ச் சக்தியையும் தருபவர்  சூரிய பகவான். மண்ணுலக உயிர்களுக்கெல்லாம் கண்கண்ட தெய்வமாக வணங்கப் படுகிறார். சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிக்கும் நாளை, 'மகர சங்கராந்தி' விழாவாக நாடெங்கும் கொண்டாடுகிறார்கள். இந்த விழா, வருடந்தோறும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இருந்து சூரியனின் பயணம் வடதிசை நோக்கிச் செல்கின்றது. இதை உத்தராயண புண்ணிய காலம் என்று சொல்வார்கள்.
பொங்கல்

உத்தராயணம் என்றால், 'வட திசை நோக்கிய வழி' என்று பொருள். அதாவது மனிதர்களின் ஓராண்டுகாலம், தேவர்களுக்கு பகல் பொழுதாகும். சூரியன் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை #சூரியன் தென் திசை நோக்கி பயணிக்கும் தட்சிணாயன காலம் ஆகும். இது தேவர்களின் இரவுப் பொழுதாகும். தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உள்ள காலம், சூரியனின் வடதிசைப் பயணம் தொடங்கும் உத்தராயன புண்ணிய காலம் ஆகும். உத்தராயன புண்ணிய காலமே நல்ல காரியங்களைச் செய்வதற்கு உகந்த காலம் ஆகும்.

‘போகிப் பண்டிகை'
பொங்கலுக்கு முதல்நாள் போகிப் பண்டிகை. போகங்களை விரும்பும் இந்திரனுக்கு போகி என்ற பெயரும் உண்டு. கோகுலத்தில் வாழ்ந்த யதுகுலத்தவர்கள் வருடந்தோறும், 'இந்திரனுக்கு விழா' எடுப்பது வழக்கம். கோகுலத்தில் கிருஷ்ணன் அவதரித்த பிறகும் அவர்கள் தவறாமல் இந்திரனுக்கு விழா எடுத்தனர். அவர்களுடன் இருந்ததால் கிருஷ்ணனும் இந்திர வழிபாட்டில் கலந்துகொள்வது வழக்கம். இதனால், இந்திரனுக்கு கர்வம் ஏற்பட்டது. இந்திரனின் கர்வத்தை அடக்க நினைத்த கிருஷ்ணன், 'கோவர்த்தனமலையையே கடவுளாக வழிபடுவோம்' என்று கூறினார். இதனால் கோபம் கொண்ட இந்திரன் பெருமழை பெய்யச் செய்தான். உடனே கிருஷ்ணன் கோவர்த்தனமலையை தன் சுட்டு விரலால் தூக்கிப் பிடித்து மழையைத் தடுத்து கோகுலவாசிகளையும், ஆவினங்களையும் காப்பாற்றினான். பகவானின் அவதாரமே, 'கிருஷ்ணன்' என்று இந்திரன் உணர்ந்து கர்வம் நீங்கிய நாளையே போகியாகக் கொண்டாடி மகிழ்கிறோம் என்று சொல்லப்படுகிறது.

போகித் திருநாளில் பழைய குப்பைகளை எரித்து, புதியனவற்றை வாங்குவது மரபு. அதாவது ஆணவம், கண்மம், மாயை ஆகியவற்றுடன், ஆசை, பொறாமை போன்ற மன மாசுகளையும் பொசுக்கி, ஆன்ம பலம் பெறவேண்டும் என்பதையே போகிப் பண்டிகை நமக்கு உணர்த்துகிறது. பண்டைய தமிழகத்திலும் போகிப் பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டு இருக்கிறது.
தைப்பொங்கல் திருநாள்
'மகர சங்கராந்தி' என்று சாஸ்திரங்கள் போற்றும் இத்திருநாள் சூரியக் கடவுளுக்கு உரிய திருநாள். துன்ப இருளகற்றி எல்லோர் மனதிலும் இன்பம் பொங்கும் வகையில் உழவிலும், வாழ்விலும் ஒளிதரும் சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் நாள் இத்திருநாள்.
பொங்கலுக்கு முன்னதாகவே வீட்டைக் கழுவி சுத்தம் செய்து வெள்ளையடித்து, கோலமிட்டு அலங்கரித்து வைப்போம். பொங்கலன்று சூரிய பூஜை அவசியம். ஆகவே, சூரிய ஒளிபடும் இடத்தை சுத்தமாகப் பெருக்கி பச்சரிசி மாவினால் தேர்போல கிழக்கு நுனியாக கோலம் இட்டு வடக்குப்புறத்தில் அரிசி மாவினாலே சூரியனைப் போல் வரைந்து அதன் அருகில் குங்குமத்தால் பாதி சந்திரனையும் வரையவேண்டும்.
பிறகு தலைவாழை இலைவிரித்து, அதில் காய்கறிகள், புதுமஞ்சள், கரும்பு, அரிசி பரப்பிவைத்துக் கொள்ளவேண்டும். மஞ்சள் பிள்ளையாரும் பிடித்துவைக்க வேண்டும். மேலும் திருவிளக்கேற்றி வைத்து பூச்சூடி, பிள்ளையார் வணக்கத்துடன் பொங்கலிட வேண்டும். புதுப் பானையில் நல்ல தண்ணீர் ஊற்றி சந்தனம், குங்குமம் இட்டு, மஞ்சள் குலை சேர்த்துக் கட்டி, அடுப்பில் வைத்து நெருப்பேற்ற வேண்டும். பிறகு புது அரிசிபோட்டு பொங்கி வரும் வேளையில், பாலூற்றி பொங்கலிட்டு படைத்து இறைவழிபாடு செய்து வணங்க வேண்டும்.
பூஜையின் முடிவாக, 'ஆதித்யஹ்ருதயம்', 'சூரிய காயத்ரி' கூறி கைகூப்பி கதிரவனை மனதில் தியானித்து வணங்கி வழிபடுவது மிகவும் நன்று. நகர்ப்புறங்களில் உள்ளோர் வீட்டுக்குள் பொங்கல் வைத்தாலும் பால்கனி அல்லது மொட்டைமாடியில் பொங்கலைப் படையலிட்டு சூரியனை கண்டிப்பாக வழிபடுதல் வேண்டும். பூஜை முடிந்து காகத்துக்கு அன்னமிட்டு ஏழை ஒருவருக்கு பொங்கல் சாதம், கரும்புத்துண்டு, காணிக்கையோடு தந்து பிறகு அனைவரும் உண்டு மகிழலாம்.

மாட்டுப் பொங்கலும், காணுப்படியும்;

இயற்கையை வழிபடுவதைப் போலவே பசுக்களையும் காளைகளையும் கன்றுகளையும் வருடத்துக்கு ஒரு முறையாவது தெய்வமாக கருதி பூஜிக்க வேண்டும் என்பது சாஸ்திர நியதி. அதை கடைப்பிடிக்கும் விதமாகவும், நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம்.
மாட்டுப் பொங்கலன்றும், பொங்கல் வைத்து வீட்டில் உள்ள மாடு, கன்றுகளைப் பூஜித்து வணங்குவதால், முப்பது முக்கோடி தேவர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். தை மாதம் இரண்டாம் நாள் காணுப்பிடி முக்கியத்துவம் பெறுகிறது.
காணு -காக்கை; பிடி -பிடிசோறு அதாவது காக்கைகளுக்கு படைக்கப்படுகின்ற பிடிசோறு காணுப்பிடியாகும். மகளிர் தம் உடன்பிறந்தவர்கள் நலமுடன் வாழ காணுப்பிடி கொண்டாடுவார்கள். வெட்ட வெளியில் தூய்மையான இடத்தில் மெழுகி, கோலமிட்டு மஞ்சள் இலை அல்லது வாழை இலை பரப்பி அதில் வண்ண வண்ணமான சித்ரான்னங்களை ( கலவை சாத வகைகள்) ஐந்து அல்லது ஏழுபிடிகளாக பிடித்து வைத்து பூஜித்து காக்கைகளுக்குப் படைத்து வழிபடுதல் வேண்டும். இந்த காக்கை வழிபாட்டை பித்ரு வழிபாடாகக் கருதி வழிபடுவோரும் உண்டு.
தைமாதம் மூன்றாம் நாள் மக்கள் யாவரும் மகிழ்வின் வெளிப்பாடாகக் கொண்டாடுவது காணும் பொங்கலாகும். அன்று தான தர்மம் செய்வதும் பெரியோரிடம் ஆசி வாங்குவதும் நம் வாழ்வை வளமாக்கும்.

Comments