அதிசய மூலிகையும் அனைவரும் அறியவேண்டிய ரகசியமும்

        மரத்தில் இருந்து உதிர்ந்து கீழே விழுந்த விதை மெல்ல  மரத்தை நோக்கி நகர்ந்து வந்து அதே மரத்தின் மீது மேலே ஏறி  மீண்டும் ஒட்டிக்கொள்கின்றது

        இப்படி ஒரு அதிசய செயலை ஒரு விருட்சமும் ஒரு விதையும் இன்றளவும் மண்ணில் செய்து கொண்டுதான் இருக்கின்றது இந்த விருட்ச்சத்திற்கு பெயர்தான் ஏரழிஞ்சில் மரம் என்பதாகும்

மனிதனின் விரல் பட்டால் 

        தனது இலைகளை சுருக்கிக் கொள்ளும் மனிதன் விலகி நின்றால் மீண்டும் இலைகளை விரித்துக் கொள்ளும் 

        இந்த வித்தையை நித்தம் செய்கின்றது ஒரு விசித்திர மூலிகை இந்த வினோத மூலிகையின் பெயர் தான் தொட்டால் சிணுங்கி

கண்டோ அல்லது காணாமலோ 

        தனது கை கால்கள் இந்த மூலிகையின் மீது பட்டுவிட்டால்  பட்ட இடத்தில் அரிப்பும் தடிப்பும் வரும் அடுத்த நொடியே அந்த இடம் வீங்கி விடும்

        இந்த வித்தையை தனது விளையாட்டாக செய்கிறது ஒரு விசித்திர மூலிகை இதற்குப் பெயர் சிறுகாஞ்சொறி

        இந்த மூலிகை கை மற்றும் கால்களில் பட்டுவிட்டால் அரிப்பு வரும் ஆனால் இந்த இலையை இரண்டு அல்லது மூன்று எடுத்து தனது உள்ளங்கையில் வைத்து நன்றாக கசக்கி மென்று விழுங்கினால் இருமல் மற்றும் தீராத சளி எனும் கப நோய்கள் முழுமையாக விலகிவிடும்

        இந்த மூலிகையை மென்று விழுங்கினால் அரிப்போ அல்லது தடிப்போ நமது வாயில் வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டாம்  எந்தப் பாதிப்பும் நமக்கு ஏற்படாது உண்மை இது

மண்ணில் எங்கும் எளிதாய் கிடைக்கின்ற 

        இந்த மூலிகையின் இலையை இரண்டாய் கிள்ளிவிட்டு இதை மீண்டும் இணைத்து வைத்தால். இரண்டாய் பிரித்த இலை மீண்டும் இணைந்து விடும் 

        இயற்கை அருளிய இந்த அதிசய மூலிகையின் பெயர் தான் அத்தால் பொருந்தி என்பதாகும்

ஆறாத புண்ணும் ஆறி வரும் 

      ஆறாத காயங்களுக்கு இந்த இலையை அரைத்து வைத்தால்  இந்த இலைக்கு புண்களை ஆற்றும் மிக மிக ஆற்றல் அதிகமாக இருக்கிறது

மணிதனின் வாடை பட்டால் 

        தன்னை மண்ணுக்குள்ளே மறைத்து கொள்ளும்  மனிதன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டால்  அடுத்த நொடியே வெளியே வந்துவிடும்

        இந்த மகா சக்தியை பெற்ற மந்திர தந்திர மூலிகையின் பெயர் தான் நிலம்புரண்டி

        மண்ணின் மேலே முளைத்திருக்கும் இந்த மூலிகை மனிதனை கண்டுவிட்டால் மண்ணை புரண்டி மண்னுக்குள்ளே சென்றுவிடுகிறது அதனாலே இதற்கு நிலம் புரண்டி என்று சித்தர்கள் காரண பெயரை வைத்துள்ளார்கள்

        அடர்ந்த கானகத்தில் ஒரு அதிசய மூலிகை இன்றும் இருக்கின்றது இதன் மீது  மனிதன் தனது கால்களை வைத்து விட்டால்  தன் மேலே கால்களை வைத்த மனிதனின் கவனத்தை சிதற வைக்கிறது வந்த  பாதையை மறக்க செய்கிறது 

        இந்த மாயாஜால மூலிகை மலைதோறும் இன்றும் இருக்கிறது இந்த மூலிகையின் பெயர் தான் திகைப்பூண்டு என்பதாகும்

        இப்படி பலவிதமான அரிய பெரிய அதிசய செயல்களை செய்கின்ற பல மூலிகைகள்  நமது பூமி எங்கும் அனேகமாக இருக்கின்றது

        இவற்றை அறிந்து இதை முறையாக நாம் பயன்படுத்தி கொண்டால் அனேக நன்மைகள் இதனால்  நமக்கும் கிடைக்கின்றது

        அரிய வகை மூலிகையில் மட்டுமே இந்த குணம் இருக்கிறது என்று எண்ணக்கூடாது எளிதாகக் கிடைக்கின்ற  மூலிகையிலும் எண்ணற்ற  அதிசய குணங்கள்  அதிகமாக இருக்கின்றது

அந்த வகையில்  ஒருசில மூலிகையும் அதன் பயனும் 

யானை நெருஞ்சில்

          யானை நெருஞ்சில் எனும் மூலிகையை பிடிங்கி இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு தண்ணீரை சிறிது நேரம் அலசினால்

          தண்ணீரானது தனது தன்மையை இழந்து விளக்கெண்ணையை போல வழவழப்பாக மாறிவிடுகின்றது

         இந்த தண்ணீரை கால் லிட்டர் வீதம் தினந்தோறும் காலை வேளையில் அருந்தி வந்தால் வெள்ளை வெட்டை குணமாகும் நீர்த்த விந்து கெட்டிப்படும் சிறுநீரக நோய்கள் குணமாகும் கல்லடைப்பு நீங்கும் உடல் குளிர்ச்சி அடையும்

சீந்தில் கொடி

          உயர்ந்த மரங்களைப் பற்றி தனது கொடியால் மரத்தை சுற்றி உயிர்வாழும் சீந்தில் கொடியை பாதியாக வெட்டி விட்டாலும் கூட மரத்தின் மேலே படர்ந்திருக்கும் கொடியானது சாகாமல்

        மரத்தில் இருந்து ஆலம் விழுதை போல மண்ணை நோக்கி வளர்ந்து வந்து மண்ணிலே தனது வேரினை பதித்து மீண்டும் உயிர்த்தெழும்

        இப்படி ஒரு அதிசய ஆற்றல் சீந்தில்கொடி இது உண்டு எனவே தான் இதற்கு சித்தர்கள் சாகா மூலி என்று சொல்லி பெயர் வைத்துள்ளார்கள்

        இந்த சீந்தில் கொடியை பொடி செய்து மூன்று கிராம் எடுத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் கல்லீரல் பலப்படும்

சிறு கட்டுக்கொடி

          ஒரு கைப்பிடி அளவு கட்டுக் கொடியின் இலையை பறித்து இதில் சிறிது தண்ணீர் விட்டு இதை தனது உள்ளங்கையில் வைத்து சிறிது கசக்கி இதிலேயே சாறு பிழிந்து இதை நூறு மில்லி தண்ணீருடன் கலந்து விட சிறிது நேரத்தில் தண்ணீரானது கெட்டியாக கட்டிவிடும்

        தண்ணீரை கெட்டிப்படுத்தி அல்வாவை போல இறுக செய்வதால் தான் இதற்கு கட்டுக்கொடி என்ற காரணப் பெயரை பெற்று இருக்கின்றது

        கட்டுக்கொடி சாறைபிழிந்து கெட்டிப்படுத்திய இந்த மூலிகை அல்வாவை  சாப்பிட்டு வர ஆண்மை சக்தி அதிகரிக்கும் அஜீரண பேதி குணமாகும் உடல் வலியை நீக்கும் உடலுக்கு நல்ல சக்தி உண்டாகும்

குன்றிமணி இலை

        குன்றிமணியின் இலையைப் பறித்து வாயிலிட்டு மென்று சுவைத்து வர இந்த மூலிகையானது சர்க்கரையைப் போல இனிக்கும் இயற்கை தந்த இனிப்பு  இது

        குன்றிமணியின் இலையை சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும் இலையை மட்டும் கசாயம் வைத்து சாப்பிட வயிற்று வலி நீங்கும்

கருடன் கிழங்கு

         மண்ணில் முளைத்து வளர்ந்துவரும் ஒரு மூலிகையை மண்ணிலிருந்து பிடுங்கி விட்டால் அது உடனே தனது உயிரை இழந்து விடும் ஆனால்  கருடன்கிழங்கு செடியானது இதற்கு முற்றிலும் விதிவிலக்காக இருக்கின்றது

        மண்ணில் இருந்து இந்த மூலிகையை பிடுங்கி விட்டு மறுபடியும் நடவு செய்யாமல் வைத்திருந்தாலும் நிலப்பரப்பின் மேலேயே நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்தது இப்படி ஒரு விசித்திர சக்தியை கருடன் கிழங்கு மூலிகை பெற்றிருக்கிறது

         கருடன் கிழங்கை பொடி செய்து இதனோடு சீந்தில் கொடியின் பொடியை சமமாக கலந்து இதில் மூன்றுகிராம் எடுத்து வெந்நீருடன் கலந்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர தோல் நோய்களான படை சொறி சிரங்கு சொரியாசிஸ் போன்ற அனைத்து நோய்களும் முழுமையாக குணமாகும்

சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி மூலிகை

          மனிதனை கொல்லும் சர்க்கரை நோயை கொன்று மனிதனை வாழ வைப்பதால் சிறுகுறிஞ்சான் எனும் மூலிகைக்கு சர்க்கரை கொல்லி என்று சித்தர்கள் பெயர் வைத்துள்ளார்கள்

          சிறு குறிஞ்சான் இலைகளைபறித்து வாயிலிட்டு மென்று துப்பி விட்டு அதன் பின்னே சர்க்கரையை வாயிலிட்டு சுவைத்து பார்க்க சர்க்கரையின் இனிப்பு சுவை நாவிற்கு தெரியாது இப்படி ஒரு அதிசய ஆற்றல் இந்த மூலிகையில் இருக்கின்றது

        இந்த மூலிகையின் பொடியுடன் சம அளவாக நாவல் கொட்டை பொடி சேர்த்து இதனை சாப்பிட்டு வர சர்க்கரை நோயின் தீவிரம் குறையும் ஆரம்ப நிலையில் இருக்கும் சர்க்கரை நோயானது முழுமையாக குணமாகும்

இன்னும் அனேக அதிசயங்கள் மூலிகையில் இருக்கின்றது

குறிப்பாக

         வேங்கை  மரம் என்று ஒரு மலைகளில் மட்டுமே  வாழும் ஒரு அரிய வகை மரம் இருக்கிறது  இந்த மரத்தை வெட்டினால் இந்த மரத்தின் பட்டையில் இருந்து மனிதனுக்கு வெட்டுப்பட்டால் எப்படி ரத்தம் வருமா அதைப்போல இந்த மரத்தின் பட்டையில் இருந்து ரத்தத்தை போல சிவப்பாக பால் வழியும்

        பார்ப்பதற்கு மனிதனின் ரத்தத்தை போலவே காட்சி தரும் இதை கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம் இந்த அதிசய மரம் அடர்ந்த காடுகள் தோறும் அனேகமாக இருக்கின்றது 

        இந்த மரத்தின் பட்டையை உலர்த்தி பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீருடன் கலந்து சாப்பிட்டு வர தீராத சர்க்கரை நோயும் தீரும்

        இந்த மரத்தின் பட்டையில் கசாயம் செய்து இதனுடன் சரிசமமாக நல்லெண்ணெய் சேர்த்து இதை தலைக்கு தடவி வர சகல விதமான பீனிசமும் தீரும் உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க தேகத்திற்கு அழகும் வசீகரமும் உண்டாகும்

Comments