வாய் சரியாக, சரளமாக பேச முடியாமல் இருப்பவர்களது பிரச்னை தீர பேசும் பெருமாள்

 


        வாய் சரியாக, சரளமாக பேச முடியாமல் இருப்பவர்களது பிரச்னை தீர ஜீவ நாடியில் அகத்திய பெருமான் கூறிய வழிமுறை:

        காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில் உள்ள கூழமந்தல் எனும் ஊரில் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக "பேசும் பெருமாள்" என்ற பெயரில் காட்சியளிக்கின்றார்.

        இங்கு பல வருடங்களுக்கு முன்பு 12 அடி உயர மகா விஷ்ணு சிலை பூமியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

பேசும் பெருமாள் பெயர்க் காரணம் :

        பேசும் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். 

        மிகவும் கம்பீரமான தோற்றம். இரு கைகளிலும் சங்கு சக்கரங்கள், மற்றொரு வலக்கை நமக்கு அருள்பாலிக்கும் வரதஹஸ்தம், இடக்கை தொடையில் பதிந்துள்ளது. ஏராளமான அணிகலன்கள்,

கிரீடம், அதில் பல வண்ண வேலைப்பாடுகள்.

ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் அணிந்துள்ள அழகிய அணிகலன்கள், தலைக்கிரீடங்களும் மெய்மறக்கச் செய்கின்றன. 

        பெருமாள் முன்பு நின்று நோக்கினால், பெருமாள் கருணையுடன் நம்மை நோக்கி புன்முறுவலுடன் பேசுவதுபோல விளங்குவதால் "பேசும் பெருமாள்" என்று பெயர்பெற்றார்.

        கண் இமைக்காமல் நாளெல்லாம் பார்த்து வணங்கத்தக்க இத்திருமேனிகளின் அழகும் நிற்கும் பாங்கும் கண்கொள்ளாக் காட்சி. இவ்வளவு உயரமும், எழிலும் வாய்ந்த திருவுருவங்களை வேறு எங்கும் காண இயலாது.

        இத்திருமேனிகளின் காதுகளில் மிக மிகச் சிறிய ஊசி நுழைவதற்குரிய கண்ணுக்குத் தெரியாத துவாரங்களை அமைத்து சிற்பிகள் தங்கள் கலைத் திறனையும், கை வண்ணத்தையும் காட்டியுள்ளனர்.

தாமரை மலருடன் தாயார் :

        இக்கோயிலின் தனிப்பெருஞ்சிறப்பு தாயார் இருவருமே தங்கள் வலக்கையில் தாமரை மலர்களை பற்றியிருப்பது. இது மிகமிக அரிதானக் காட்சி. 

        மற்ற கோயில்களில் ஒரு தேவி வலக்கையிலும் இன்னொரு தேவி இடக்கையிலும் தாமரை மலரை வைத்திருப்பார். இங்கு இதிலும் புதுமை. இவ்வளவு கம்பீரமான தோற்றமாக இருந்தாலும் சாந்த மூர்த்தியாக திகழ்கிறார் பேசும் பெருமாள்.

        பேசுகின்ற வார்த்தைகளில் தடுமாற்றம் பெற்றவர்கள், பேச்சு சரியாக  வராத குழந்தைகள் இந்த ஆலயத்திற்கு சென்று முடிந்தபொழுதெல்லாம் வழிபாடு செய்து வந்தால் கட்டாயம் நல்ல பலன் உண்டு. 

        சரியாக பேசமுடியாத, நடக்க முடியாத, காதுகேளாத குழந்தைகளுக்காக இந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதற்காக, முதல்தடவை என்ன கிழமையில் செல்கிறோமோ, அதே கிழமையில் தொடர்ந்து ஒன்பது வாரம் குழந்தையுடன் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும். 

        தேங்காயில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு ஒன்பது முறை இந்த கோயிலை வலம் வரவேண்டும்.  பேச்சு சரியாக வராத குழந்தையின் முகத்தில் சங்கு தீர்த்தம் தெளிக்கப்படுகிறது.

        தொடர்ந்து குழந்தையின் முகத்தில் சங்கு தீர்த்தம் தெளிப்பதற்காக ஒரு வாரத்துக்கான தீர்த்தம் வீட்டில் வைத்து கொள்ளவும் வழங்கப்படுகிறது.

        மேலும் இதேபோன்ற குறைகள் உள்ள குழந்தைகளைக் கொண்ட அமைப்புக்கு முடிந்த உதவிகளை செய்து வருவதும் விரைவில் நல்ல பலன்கள் கிடைக்க உதவும் .

பேசும் பெருமாள் கோவில் முகவரி:

அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில்

கூழம்பந்தல், காஞ்சிபுரம் மாவட்டம்.

போன்: +91 97879- 06582, 04182- 245 304, 293 256

        காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது கூழமந்தல் என்ற ஊர். இவ்வூருக்குச் செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

Comments